நண்பர் மணா பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரக்கூடியவர். நாட்டின் நடப்புகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். சம்பவங்களை நேரில் பார்த்து , தகவலை அறிவதோடு மட்டுமல்லாமல், களப்பணியிலும் ஈடுபட்டு , அங்கே புதைந்துகிடக்கும் உண்மைகளைத் துருவி ஆராய்ந்து எழுதி வருபவர்களில் முதன்மையானவர்.
'சொல்வது நிஜம்' என்ற இந்தப் புத்தகம் மணா எழுதி இருக்கும் முத்திரை பதித்த 33 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்திருக்கும் தகவல்கள் அனைத்தும் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் படும் கொடுந்துயரங்கள் கண்முன் சாட்சியமாகியுள்ளன.
'தீச்சட்டி கோவிந்தன்' என்ற காவல்துறை அதிகாரி, விடுதலை போராட்ட வீராங்கனை சொர்ணம்மாளை நிர்வாணமாக்கிக் கொடுமை செய்த அநீதியைக் கூறிவிட்டு அதே விடுதலை வீராங்கனைக்கு தியாகிகளுக்கு உரிய சலுகை கிடைக்காத கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாட்டுப்புறச் சிறுவர்களின் வாழ்க்கை, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் வாழ்க்கை , இவை படிப்பவர்களின் மனசாட்சியைக் கிளறி, இத்தனையும் உண்மைதானா? சுதந்திர நாட்டில் இவை எல்லாம் இன்னமும் நடக்கின்றனவா? என்று நினைக்கத் தோன்றுகிறது.
- புத்தகத்துக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து
Tags: solvadhu, nijam, சொல்வது, நிஜம், மனா, Sixthsense, Publications