நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளேன். 'ரத்தம் ஒரே நிறம்', 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை. ' ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது 'கருப்பு சிவப்பு வெளுப்பு' என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது. மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன், மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவர் களிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டு வார்த்தைகள் எல்லாம் எனக்குப் பாடமாயின. தொலைபேசியில் கொலை பேசினார்கள். குமுதம் இதழைக் கடைகளில் எரித்தார்கள். அதன் ஆசிரியருக்கு நாடார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கதையை உடனே நிறுத்தும்படியும், மன்னிப்பு கேட்கும்படியும் வற்புறுத்தினார்கள். ஆசிரியர் எஸ்.ஏ.பி. எனக்கு போன் போட்டு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். நான் ஓர் இனத்தின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் தற்போதைய கோபத்தில் கதையின் நோக்கம் அதுவல்ல, அடுத்து வரும் அத்தியாயங்களைப் படித்தால் தெரியும் என்று என்னதான் விவாதித்தாலும் அந்த உணர்ச்சி பொங்கும் கணத்தில் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுத வேறு பழக வேண்டும். நிறுத்திவிடுங்கள். அடம் பிடித்து மரணத்துடன் விளையாடு வதற்கு இது ஏதும் பிரெஞ்சுப் புரட்சி அல்ல' என்றேன். கதை நிறுத்தப்பட்டது. ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஆறு மாதம் கழித்து கோபம் அடங்கியதும் இதே கதையை தலைப்பை மாற்றி வெளியிடலாம் என்றார். 'கருப்பு சிவப்பு வெளுப்பு' அதே போல் ஆற அமர 'ரத்தம் ஒரே நிறமாக' வெளிவந்தது. சிப்பாய்க் கலகத்தைப் பற்றி நிறைய படித்தபின் அதில் ஒரு தமிழன் கலந்துகொண்டால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்த கதை இது. இப்போது இதைப் படித்துப் பார்க்கும்போது எதற்காக அதை எதிர்த்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை மறுபடி கிளற இஷ்டமில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் எனக்குப் பல விஷயங்கள் புலனாயின. தமிழ்ச் சமூகத்தில் சில கதைகளை சிலர்தான் எழுதலாம் என்ற எழுதப்படாத ஓர் விதி இருக்கிறது. அதை மீறினதால் வந்த வினை என்பது இப்போது புரிகிறது. எழுத்தின் மேல் பிடிவாதம் இருப்பதோ, எழுதினது வேத வாக்கு, அதை யாராவது வழி மறித்தால் உயிருள்ளவரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு சிறுபிள்ளைத்தனம். எல்லா போராட்டங்களும் அலுத்துவிடுகின்றன. புதிய காரணங்கள் தேடப்படுகின்றன. 'ரத்தம் ஒரே நிறம்' மீண்டும் வந்தபோது முதலில் எதிர்த்தவர்கள் எவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
ரத்தம் ஒரே நிறம்-Raththam Orea Niram
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹270
Tags: raththam, orea, niram, ரத்தம், ஒரே, நிறம்-Raththam, Orea, Niram, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்