• எண்ணும் எழுத்தும் - Ennum Ezhuththum
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரெண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்கிறார் வள்ளுவர் நான் ஒற்றைக் கண்ணன். எண்களென்றாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் விதி எண்ணப் பிடிக்காதவனை எண்ணுவதையே பிழைப்பாக்கிவிட்டது. ‘ஒன்றை இரண்டாகப் பிரித்ததே இரண்டும் ஒன்றாவதற்குத்தான்’ இப்படி நான் எழுதியிருக்கிறேன். அதை அப்படியே பிருந்தா சாரதி எண்ணியிருக்கிறார். வியப்பேதுமில்லை. ஒரே பாதையில் நடப்பவர்கள் அதே காட்சிகளையே பார்ப்பார்கள். நான் நடக்கும் பாதையிலேயே பிருந்தா நடக்கத் தொடங்கியிருக்கிறார். ஒளியை அடைவார். முதலில் பூஜ்யம்தான் இருந்தது. அது முட்டையாகவும் கோழியாகவும் இருந்தது பூஜ்ஜியத்திலிருந்துதான் ஒன்று வெளிப்பட்டது. அந்த ஒன்றிலிருந்தே மற்ற எண்கள் பிறந்தன. இது கூட்டலாகவும் பெருக்கலாகவும் நடந்தது. இறுதியில் எல்லாம் ஒன்றில் ஒன்றும். அந்த ஒன்று பூஜ்ஜியத்தில் ஒடுங்கும். ஆதியும் பூஜ்ஜியம் அந்தமும் பூஜ்ஜியம் அதுதான் முப்பாழ் அதுதான் மோட்சம் அதுதான் நிர்வாணம் அதுதான் வீடுபேறு நாமும் பூஜ்ஜியத்திலிருந்துதான் வந்தோம் இறுதியில் பூஜ்ஜியத்திற்குள்தான் மறைவோம். எங்களை விட மதிப்புடையது பூஜ்ஜியம்தான். அதன் இடம் விசாலமானது. எல்லையற்றது. இறைவன் அங்கேதான் இருக்கிறான். இறைவன் பூஜ்ஜியத்துக்குள் இருக்கிறான் என்பது கூடத் தவறு. அவன் பூஜ்ஜியமாகவே இருக்கிறான். எல்லா எண்களையும் உள்ளடக்கிய பூஜ்ஜியமாக. இந்த தத்துவத்தின் சாரத்தை 'கூட்டிக் கழித்து வாழ் பூஜ்ஜியம் என்று புரிந்துகொண்டு போ.' என்ற வரிகளில் பிழிந்து தந்துவிடுகிறார் பிருந்தா. உண்மையில் எல்லாக் கணக்குகளின் விடையும் பூஜ்ஜியமே. தேர்வில் பூஜ்ஜியம் வாங்குகிறவன் தோற்கிறான். ஆனால் வாழ்கையில் பூஜ்ஜியம் வாங்குகிறவன் ஞானியாகிறான். பிருந்தா சாரதி எண்களைப் பற்றியே எண்ணி எழுத்தாக்கியிருக்கிறார். எண்ணையே எழுத்தாக்கியிருக்கிறார். அவருக்கு மதிப்பெண்ணாக நான் பூஜ்ஜியத்தை வழங்குகிறேன். பிருந்தாவின் கவிதைகள் பிருந்தாவனமாய் விரிகின்றன. அங்கே அவர் கண்ணனாகிக் குழலூதுகிறார். எண்களெல்லாம் கோபியர்களாகி அவரைச் சுற்றி ஆடுகின்றன. * பிருந்தா திரைப்பட உலகத்திலிருக்கிறார் அதனால் எனக்குக் கொஞ்சம் அச்சமாக இருக்கிறது; எங்கே அவர் புல்லாங்குழல் அடுப்பூதும் குழலாக மாறிவிடுமோ என்று. அவர் தன்னையும், தன் புல்லங் குழலையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தப் புல்லாங் குழலில் அமர கீதங்கள் பல கர்ப்பத்தில் இருக்கின்றன. அப்துல் ரகுமான் 4.1.2017

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எண்ணும் எழுத்தும் - Ennum Ezhuththum

  • ₹70


Tags: ennum, ezhuththum, எண்ணும், எழுத்தும், -, Ennum, Ezhuththum, பிருந்தா சாரதி, டிஸ்கவரி, புக், பேலஸ்