இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான சோழ நாட்டிற்கு அழைத்து செல்கிறது.
புத்தகத்தின் பெரும்பாலான பகுதி வாணிபம் மற்றும் வணிகர்களை மையப்படுத்தி நகர்கிறது. பாதி பக்கங்களை கடக்கும் வரை பெரும் போர்களை சந்தித்து விட்டு அமைதியான சூழலில் இருக்கும் சோழ நாட்டில் அதிகாரவர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுகிறது. மிகவும் சிந்தித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன். எனினும் ஒரு கோர்வையாக இல்லாதது போல் உள்ளது. ஒரு விஷயம் நடக்கும் பொழுதே பக்கங்கள் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி போகிறது.
ஒவ்வொரு படைப்பும் அந்த ஆசிரியரின் சிறந்த படைப்போடு ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் இந்த புத்தகத்தை உடையார் உடன் ஒப்பிடும் பொழுது அதில் இருந்த சுவை இதில் சற்று கம்மியோ என்று எண்ண வைக்கிறது. உடையார் ராஜ ராஜ சோழர் காலத்தை மையமாக வைத்து எழுதியது. போர்கள், காதல், ஒற்றர் படை, பிரம்மராயர், ராஜேந்திர சோழருடன் நடக்கும் பனிப்போர் என்று மிக பெரிய கதைக்களத்தில் புனையப்பட்டது. இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை அப்படியே ஒன்றிப்போக செய்துவிடும். ஆனால் அது போல் ஒரு கோர்வையாக இந்த புத்தகம் இல்லை. வணிகர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது.
ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சோழ நாட்டை பாலகுமாரன் காட்டியிருக்கிறார். போரற்ற காலத்தில் நடப்பதால் அரசரும் அவ்வப்போழுதே வந்து போகிறார். நான்கு பாகங்கள் வரும் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
Tags: avani, அவனி-Avani, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்